No products in the cart.
மன்னாரில் 16 ஆவது நாளாக தொடரும் போராட்டம்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (18) 16 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம் ஆதரவு வழங்கும் வகையில் செல்வநகர் கிராம மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய தினம் காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இன்று மாலை இடம் பெறவுள்ள விசேட சந்திப்பின் போது ஜனாதிபதி மன்னார் மக்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.