No products in the cart.
யாழ்ப்பாணத்தை தவிர வடக்கு-கிழக்கில் ஹர்த்தால் வெற்றி
யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய பகுதிகளில் ஹர்த்தால் வெற்றிகரமாக அமைந்ததாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்தனர்.
இந்த ஊடகச் சந்திப்பில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரி தமிழரசு கட்சி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், இதற்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன. இந்தப் பகுதியில் ஆதரவு கிடைக்காதது மனவருத்தம் அளிப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
ஹர்த்தால் அறிவிப்பு வெளியான உடனே, ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோர் தமிழரசு கட்சியைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
இதனை அவர் ஹர்த்தாலின் வெற்றியாகக் கருதுவதாகக் கூறினார். இந்த ஹர்த்தால் ஒரு அடையாளப் போராட்டமாக இருந்தாலும், இராணுவ முகாம்களை அகற்றக் கோரி எதிர்காலத்தில் மேலும் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்று சிவஞானம் உறுதியளித்தார்.