No products in the cart.
இலங்கை அரச வங்கிகள்: வருடாந்திர அறிக்கைகள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பு
இலங்கையின் முன்னணி அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியன 2025ஆம் ஆண்டில் தமது வரலாற்றில் மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளன.
இவ்வங்கிகளின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள் நேற்று(20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.
மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோ அறிக்கையைக் கையளித்த போது, வங்கி வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகூடிய இலாபத்தை 2025இல் ஈட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வரிக்கு முந்திய இலாபம்: 64.4 பில்லியன் ரூபா.
வரிக்குப் பிந்திய இலாபம்: 40 பில்லியன் ரூபா.
இலங்கை வங்கி தனது 87 வருட கால வரலாற்றில் ஈட்டிய மிகப்பெரிய இலாபத்தை இம்முறை பதிவு செய்துள்ளது என்று அதன் தலைவர் காவிந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.
வரிக்கு முந்திய இலாபம்: 120.8 பில்லியன் ரூபா.
அரசுக்குச் செலுத்தப்பட்ட வரி: 77 பில்லியன் ரூபா.
தேசிய சேமிப்பு வங்கி அனைத்து வரிகளுக்கும் முன்னர் 59 பில்லியன் ரூபா இலாபத்தைப் பெற்றுள்ளது என்று அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ கப்ரால் தெரிவித்தார்.
அத்துடன், இலாபப் பங்காக திறைசேரிக்கு 6 பில்லியன் ரூபாவை வங்கி வழங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு அமைவாக, உயர் நிதி ஒழுக்கத்துடன் செயற்பட்டதே இந்தச் சாதனைக்குக் காரணம் என்று வங்கித் தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்த வெற்றியில் வங்கி ஊழியர்களின் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பையும் அவர்கள் இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.














