No products in the cart.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக முறைப்பாடு
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண சூப்பர் 4 போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான ஹாரிஸ் ரவூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோரின் நடத்தைகள் தொடர்பாக இந்தியா சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வ முறைப்பாடு அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) புதன்கிழமை இருவருக்கும் எதிராக முறைப்பாடு அளித்ததாகவும், ஐசிசிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சாஹிப்சாதா மற்றும் சாஹிப் இந்த குற்றச்சாட்டுகளை எழுத்துப்பூர்வமாக மறுத்தால் ஐசிசி விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணைக்காக அவர்கள் ஐசிசி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன் முன்னிலையாக வேண்டியிருக்கும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியதற்காகவும், ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய ஆயுதப் படைகளுக்கு தனது அணியின் வெற்றியை அர்ப்பணித்ததற்காகவும் இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
செப்டம்பர் 14 போட்டிக்குப் பின்னர் சூர்யகுமார் யாதவ்வின் கருத்துக்கள் வந்தன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் ஹாரிஸ் ரவூப் இந்தியாவின் இராணுவ நடவடிக்கையை கேலி செய்யும் வகையில் ஒரு விமானத்தை வீழ்த்துவதை சித்தரிக்கும் சைகைகளைச் செய்தார்.
போட்டியின் போது, அவர் இந்திய தொடக்க வீரர்கள் சுப்மான் கில் மற்றும் அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதே போட்டியின் போது, சாஹிப்சாதா தனது துடுப்பாட்ட மட்டையை இயந்திர துப்பாக்கியைப் போன்று பாசாங்கு செய்து கொண்டாடினார்.
இந்த நடத்தைகள் பரவலாக விமர்சிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.