இலங்கை

நுவரெலியாவில் ரோஜாப் பூவின் விலை சடுதியாக அதிகரிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு மலர் கடைகளில் கடந்த ஒரு வார காலமாகவே ரோஜாப் பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. 

காதலர் தினம் இன்று (14) சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள் மற்றும் சொக்லேட் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்வது வழக்கம். 

காதலின் அடையாளமாக ரோஜாப்பூ கருதப்படுவதால், இத்தினத்தில் பூக்கடைகளில் விற்பனை அசுர வேகத்தில் இருப்பது வழமை. எனினும், இம்முறை நுவரெலியாவில் வியாபாரம் சற்று மந்தமாகவே காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

பூக்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் அவற்றை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். 

சிவப்பு ரோஜா: 750 ரூபாய் 

மஞ்சள் ரோஜா: 600 ரூபாய் 

வெள்ளை ரோஜா: 400 ரூபாய் 

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற அனர்த்தங்களால் மலர் தோட்டங்கள் அழிவடைந்தன. இதனால் சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து கடந்த ஆண்டை விடப் பெருமளவில் குறைந்துள்ளது. 

குறிப்பாக, ஜனவரி மாதம் முழுவதும் நிலவிய கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்காலப் பருவநிலை மாற்றம் காரணமாக, ரோஜா உற்பத்தி சுமார் 35% முதல் 45% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. 

உற்பத்தி குறைவு மற்றும் அதிகத் தேவை காரணமாகவே ரோஜாப் பூக்களின் விலை வரலாறு காணாத நிலையை எட்டியுள்ளது. 

மலையகத்தில் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால், தலைநகர் கொழும்பு உள்ளிட்ட ஏனைய இடங்களுக்குப் பூக்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

தற்போது இளைஞர்கள் இயற்கை மலர்களுக்குப் பதிலாகச் செயற்கை மலர்களைப் பரிசளிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 

இதுவும் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைய ஒரு காரணமாகும். “மொத்த விலையில் பூக்களை வாங்கி வந்துள்ளோம், ஆனால் சில்லறை விலையில் மக்கள் வாங்கத் தயங்குகிறார்கள். 

இன்று இப்பூக்கள் விற்பனையாகாவிட்டால் அனைத்தும் வீணாகிவிடும்” என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…