2026 இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் உத்தியோகபூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இந்திய ரசிகர் ஒருவர் தென்னாபிரிக்க அணியை கேலி செய்யும் வகையில் அமைந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நீக்கியுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இடையிலான மோதலை முன்னிட்டு, போட்டிக்கான விறுவிறுப்பை அதிகரிக்க இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
ஒரு உணவகத்தில் இந்திய ரசிகர் ஒருவர் தென்னாபிரிக்க ஆதரவாளரை ‘கப்கேக்’ (Cupcake) மூலம் கிண்டல் செய்வதும், 2024 இருபதுக்கு 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி தோல்வியை அவருக்கு நினைவுபடுத்துவதும் போல அந்த காணொளி அமைந்திருந்தது.
விளையாட்டு உணர்வைச் சிதைப்பதாக அமைந்த இந்த விளம்பரத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அஹமதாபாத்தில் நடைபெற்ற சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியைத் தழுவியது.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த விளம்பரம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்திலிருந்து நீக்கப்பட்டது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தென்னாபிரிக்க நடிகரான தன்ஜா வூர் (Thanja Vuur), “கப்கேக்” கருப்பொருளை வைத்தே இந்தியாவைப் பழிவாங்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கப்கேக் ஒன்றைச் சாப்பிட்டவாறு இந்தியாவின் தோல்வி தொடர்பான ஸ்கோர்கார்டைக் காட்டி, “மிகவும் இனிமையானது” (So sweet) எனக் குறிப்பிட்டுள்ளார்.
2023 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குப் பிறகு, ஐசிசி தொடர்களில் இந்தியாவின் 18 போட்டிகள் கொண்ட தொடர் வெற்றிப் பயணம் இந்தத் தோல்வியின் மூலம் முற்றுப்புள்ளிக்கு வந்துள்ளது.
தற்போது இந்தியாவின் நிகர ஓட்ட விகிதம் -3.800 ஆகக் குறைந்துள்ளதால், அரையிறுதிக்குத் தகுதி பெற ஸிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
