இலங்கை

குடு சலிந்துவின் 2 கோடி பெறுமதியான சொத்துகள் முடக்கம்

வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவரும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான பாணந்துறை குடு சலிந்து என்ற சலிந்து மல்சித்தவுக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

அதன்படி பாணந்துறை – இரத்தினபுரி வீதியில், மகாபெலன சந்தியில் அமைந்துள்ள 40 பேர்ச் காணி, அதில் உள்ள ஒரு வீடு, களஞ்சியத் தொகுதி மற்றும் ஒரு கடைத் தொகுதி ஆகியவை இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. 

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட குடு சலிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

அதன்பின்னர், அவர் மீண்டும் ரகசியமாக வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார். 

போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த பணத்தில் இந்தச் சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட நீண்டகால விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் குடு சலிந்து மற்றும் பாணந்துறை குடு நிலங்க ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக பாணந்துறை தெற்கு, ஹிரண மற்றும் பின்வத்தை ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று பலர் கொல்லப்பட்டனர். 

குடு நிலங்க உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த மோதல்கள் ஓரளவுக்குக் குறைவடைந்துள்ளன. 

தற்போது வெளிநாடொன்றில் தலைமறைவாக இருக்கும் குடு சலிந்து தொடர்பாகவும், அவரது சொத்துக்கள் குறித்தும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…