இலங்கை

எரிபொருள் நெருக்கடி: ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் யோசனை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை அதிகரிப்பு, விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் எரிபொருள் வழங்கும் நாடுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய ஸ்திரமற்ற நிலைமைகள் காரணமாக, இலங்கையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


எனவே, ரயில் சேவையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக்கூடும் என்பதை முன்கூட்டியே கணித்து, கடந்த 4ஆம் திகதி ரயில் திணைக்களத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.


எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் போது தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாடு குறைந்து, அலுவலகப் பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் நாளாந்தம் பயணம் செய்யும் பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாக அமையும். குறிப்பாக, நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் நாளாந்த போக்குவரத்துத் தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக, தற்போதுள்ள பொதுப் போக்குவரத்து கட்டமைப்பின் மீதான அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


எனவே, போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ரயில் சேவையை விரைவாக விரிவுபடுத்தி வலுப்படுத்துவது அவசியமான ஒன்றாகும். இந்தச் செயல்பாடுகளைத் தாமதமின்றி முன்னெடுப்பதற்காக, ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்மொழியப்பட்ட யோசனைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…