இலங்கை

4000 ரூபாய் இலஞ்ச பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர், 4,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றபோது இன்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டாளர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்து அவரது தாய் விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக ‘119’ அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார். 

தாயிடம் வாக்குமூலம் பெற்று சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், பொறுப்பில் எடுக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை மீண்டும் ஒப்படைக்கவும் அவர் இலஞ்சம் கோரியுள்ளார். 

இதற்காக முதலில் 5,000 ரூபா கோரப்பட்டு, அதில் 1,000 ரூபாவை முன்பணமாகப் பெற்றுக்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளார். 

மீதமுள்ள 4,000 ரூபா பணத்தை வழங்கினால், தாயிடம் மீண்டும் வாக்குமூலம் பெறாமல் ‘119’ முறைப்பாட்டை நீக்கி, சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். 

இன்று காலை 10.12 மணியளவில் அக்கரைப்பற்று வைத்தியசாலை வளாகத்தில் வைத்து குறித்த 4,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட போதே, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…