இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய இளைஞர் ஒருவர் கைது – அதிகாரிகள் நடவடிக்கை


கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 2 கோடி 87 லட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வர முயன்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 24 வயதுடைய இந்திய நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மிகவும் சூட்சுமமான முறையில் தனது பயணப் பொதியில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருளை அவர் கொண்டு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இந்தப் போதைப்பொருளைக் கொள்வனவு செய்துள்ளார்.

அங்கிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்று, பின்னர் மலேசிய எயார்லைன்ஸுக்கு சொந்தமான MH-179 விமானம் மூலம் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பையை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதிலிருந்த அட்டை பெட்டியில் ஒட்டப்பட்ட நிலையில் போதைப்பொருள் கண்டறியப்பட்டது.

அங்கிருந்து சுமார் 2 கிலோ 87 கிராம் எடையுள்ள குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…