இலங்கை

வடக்கு மக்களின் நலன் – ஆளுநர் வலியுறுத்திய கோரிக்கை

ஏனைய மதங்களுக்கு இருப்பதைப் போன்று, சைவ சமயத்துக்கும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் முதலாவது குருபூசை வைபவம், சித்திரைத் திருவாதிரை நாளான நேற்று (22.04.2026) காலை நல்லை ஆதீனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், குரு மகா சந்நிதானத்தின் நினைவைப் போற்றும் வகையிலான ‘சிறப்பு மலரை’ உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துச் சிறப்புரையாற்றினார்.

அத்துடன், இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக மறைந்த குரு மகா சந்நிதானத்தின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது: நான் 2015ஆம் ஆண்டு யாழ். மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற பின்னர்தான், இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளுடன் மிக நெருக்கமாகப் பழகும் நல்வாய்ப்புக் கிடைத்தது.

அக்காலப்பகுதியில் ஆலயங்கள் தொடர்பான பல பிணக்குகள் சமூகத்தில் எழுந்து, அவற்றில் சில நீதிமன்றம் வரைகூடச் சென்றிருந்தன. அப்போது அது குறித்துக் குரு மகா சந்நிதானத்துடன் கலந்துரையாடியபோது, ஏனைய மதங்களுக்கு இருப்பதைப் போன்று சைவ சமயத்துக்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபை ஒன்றின் தேவை இருப்பதை அவர் ஆழமாக வலியுறுத்தியிருந்தார்.

அந்தத் தேவை தற்போதும் தொடர்வதாகவே நான் கருதுகின்றேன். யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அரசியல் தலைவர்களையும், வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் எமது சமயத்தின் பெயரால் சந்தித்துப் பேசுபவராக இரண்டாவது குரு மகா சந்நிதானமே திகழ்ந்தார்.

அவரின் மறைவு எமக்குப் பாரியதொரு வெற்றிடத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. தற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் எவ்வித அடிப்படைகளுமின்றிப் பலருக்கும் சகட்டுமேனிக்குச் சேறுபூசுகின்றார்கள்.

ஒருவர் நல்ல விடயங்களைச் செய்ய முற்பட்டால், எமது சமூகத்தவர்களே அதில் குறைசொல்லிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு குறைசொல்பவர்கள் அல்லது சேறுபூசுபவர்கள் தாமே அந்த நற்பணிகளைச் செய்வார்கள் என்றால், நல்லது செய்பவர்கள் தாராளமாக ஒதுங்கிக் கொள்ளலாம்.

ஆனால், அவர்களும் செய்ய மாட்டார்கள். சமூகத்துக்காகச் செய்பவர்களையும் விடமாட்டார்கள். இது எமது சமூகத்தின் மிகப் பெரிய சாபக்கேடாகும். இதனை நாம் மாற்றியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…