இலங்கை

நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்த ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபா செலவு


நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் 5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையைச் செலவிடுவதாக தேசிய நீர்வெறுப்பு நோய் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. 

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் நீர்வெறுப்பு நோய் தொடர்பான மரணங்களை முற்றாக ஒழிப்பதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிரோஷன் கமகே தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி பிரதேசத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் காணப்பட்ட நீர்வெறுப்பு நோய் மரணங்களின் எண்ணிக்கையை விட, கடந்த ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் 14 நீர்வெறுப்பு நோய் மரணங்கள் பதிவாகியுள்ளன. 2030 ஆம் ஆண்டில் இந்த மரணங்களை பூஜ்ஜியமாக்கி, எவரும் உயிரிழக்காத நாடாக இலங்கையை உருவாக்குவதே எமது இலக்காகும். 2024 ஆம் ஆண்டில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 20 ஆக இருந்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 3 மரணங்கள் பதிவாகியுள்ளன. 

மக்களுக்கான தடுப்பூசிகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஆண்டுக்கு சுமார் 800 மில்லியன் ரூபாவைச் செலவிடுகிறது. நாய்கள் மற்றும் ஏனைய விலங்குகளுக்கான தடுப்பூசிகளுக்காக சுமார் 2.5 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. ஒட்டுமொத்தமாக நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஆண்டுக்கு சுமார் 5 பில்லியன் ரூபாவைச் செலவிடுகிறது” என்றார். 

இலங்கையின் நாய் தொகையானது சுமார் 2.7 மில்லியனாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

“இலங்கையில் பதிவாகும் நீர்வெறுப்பு நோய் மரணங்களில் 99 சதவீதமானவை நாய் கடித்ததன் மூலமே ஏற்படுகின்றன. ஒவ்வொரு 8 மனிதர்களுக்கும் ஒரு நாய் இருப்பதாகக் கணக்கிடுகிறோம். இது பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபடலாம். மக்கள் குழுக்களுக்கு ஏற்பவும் இது மாறுகிறது. எமது மதிப்பீட்டின்படி இலங்கையில் 2.7 மில்லியன் நாய்கள் உள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…