இலங்கை

இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம் – பொலிஸ் உயர் அதிகாரி கைது

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருக்கும், அவரது மனைவிக்கும் தலைமறைவாக இருப்பதற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் மேலும் ஒரு சந்தேகநபர் ஆகியோரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. 

கடந்த 17 ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கார் ஒன்றில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. 

உயிரிழந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டமையாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 

இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் காதலர் எனும் கூறப்படும் நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

வௌ்ளவத்தையில் இருந்து பேருந்தில் பிரதான சந்தேகநபர் அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போதே இந்த கைது இடம்பெற்றிருந்தது. 

சந்தேகநபர்கள் கைதாகும் போது மாறு வேடத்தில் இருந்தமை தெரியவந்தது. 

அவர்கள் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இந்நிலையிலேயே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…