இலங்கை

வீதி விபத்துகளில் அதிகளவில் உயிரிழப்பவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களே!

தற்போது நிகழும் வீதி விபத்துகளில் அதிகளவிலான உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள்கள் மூலமே ஏற்படுவதாக தேசிய வீதி பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அச்சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன, முறையான தரமான தலைக்கவசத்தை அணிவதன் மூலம் விபத்துகளின் போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,626 விபத்துகள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 1,585 விபத்துகளை விட அதிக எண்ணிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இக்காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 749 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 ஓட்டுநர்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனதும் பிறரதும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் எப்போதும் தலைக்கவசம் அணிந்து தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அவர் ஓட்டுநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தேசிய வீதி பாதுகாப்புச் சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன:

“இன்று வீதிகளில் அதிகளவிலான விபத்துகள் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பிலேயே நிகழ்கின்றன, அதிகளவிலான உயிரிழப்புகளும் மோட்டார் சைக்கிள்கள் மூலமே நிகழ்கின்றன. ஒரு வருடத்திற்கு 2,500 முதல் 2,700 வரையிலான உயிரிழப்புகள் நிகழும் போது, அதில் சுமார் 1,000 உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள் விபத்துகளால் ஏற்படுபவையாகும். எனவே, இதற்காக நாங்கள் விசேட திட்டமொன்றை அமல்படுத்தி வருகிறோம். இதன் ஒரு அங்கமாக அனைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் தலைக்கவசம் அணிவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில் பாதுகாப்புத் தலைக்கவசத்தை அணிவது மிகவும் முக்கியமானது. சாலை விபத்துகளில் நிகழும் பெரும்பாலான உயிரிழப்புகளுக்குக் காரணம் தலைக்காயங்கள்  அல்லது தலையில் ஏற்படும் கொடிய காயங்களே ஆகும். எனவே, தலைக்கவசம் அணிவது மிகவும் முக்கியமான ஒன்று என நாங்கள் கருதுகிறோம். இதற்காக சர்வதேச தர நிர்ணய நிறுவனம், நுகர்வோர் சேவை அதிகாரசபை மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து தீவு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் ஒரு முறைசார் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். நீங்கள் பயன்படுத்தும் தலைக்கவசம் SLS முத்திரை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.”

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…