இலங்கை

மதத் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்து, கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சமூகத்திற்கும் தமது கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பின்மை அல்லது அச்சம் ஏற்படாத வகையிலான சூழலை உருவாக்குவதும், அவர்களின் உள ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். 

அரசியல் ரீதியாக செயற்படும் இனவாதப் போக்குகள் மற்றும் உள்ளக மோதல்களின் தன்மையை சரியாகப் புரிந்து கொண்டு, மீண்டும் இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் எவ்வித இனவாத மோதல்களும் ஏற்பட இடமளிக்கவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஊழல் மோசடிகள் தொடர்பிலோ அல்லது சட்டத்தின் ஆட்சியின் ஆதிக்கம் தொடர்பிலோ தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாது நிலையில், சில குழுக்கள் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். 

நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களைப் பாராட்டிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர்கள், அதற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர். 

மதம் அல்லது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், மதத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டியது அனைவருக்கும் அன்பைப் பகிர்ந்தளிப்பதேயாகும் என்றும் இந்து குருமார்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். 

ஜனநாயக சமூகமொன்றில் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்களைக் கேள்விக்குட்படுத்த மக்களுக்கு உள்ள முழுமையான உரிமையை தற்போதைய அரசு ஏற்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இருப்பினும், இனங்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதற்கோ அல்லது சமூகத்திற்குள் வெறுப்பைப் பரப்புவதற்கோ எவருக்கும் உரிமையில்லை என்றும் வலியுறுத்தினார். 

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம் சமூகத்தைக் இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் குறித்தும் இதன்போது பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். 

ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அதில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்ததுடன், அதற்கான நடவடிக்கைகளுக்குத் தமது ஆதரவையும் தெரிவித்தனர். 

இஸ்லாமிய மத நூல்கள் மற்றும் கல்வி தொடர்பாக உருவாகியுள்ள சில பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டதுடன், பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அப்பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும், சில தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி அந்த நூல்களைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

அரசியலமைப்பு சபை போன்ற தேசிய மட்டத்திலான ஆட்சி மன்றங்களில் முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களினதும் சரியான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான அரசின் தலையீட்டை விளக்கிய ஜனாதிபதி, அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதே அரசின் நோக்கம் என்றும் கூறினார். 

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சில பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியினட கவனம் செலுத்தப்பட்டதுடன், சீருடைப் பிரச்சினை போன்ற தொழில்நுட்ப அல்லது நிர்வாக ரீதியான காரணங்களை முன்வைத்து சமூகத்தில் இனவாத அல்லது மத ரீதியான பதற்றங்கள் மீண்டும் தலைதூக்கும் சூழ்நிலைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இதனிடையே நாட்டின் அனைத்து மக்களிடையேயும் சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தி, எவ்விதமான இனவாத அல்லது மத வெறுப்பு நடவடிக்கைகளுக்கும் இடமளிக்காமல் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்காக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து இதன்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அழிவுகளைத் தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

அனைத்து மக்களிடையேயும் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய கத்தோலிக்க மதத் தலைவர்கள், அதற்காகத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர். 

கத்தோலிக்க மக்கள் வாழும் பகுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…