No products in the cart.
நோர்வே ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு ; தடைக்காலம் தொடர்வதாக அரசாங்கம் விளக்கம்
நோர்வே நாட்டு ஆய்வுக் கப்பலான டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் என்ற ஆய்வுக்கப்பல் இலங்கை விஜயத்திற்கு அனுமதி கோரிய நிலையில், அந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதை மையப்படுத்தி ஏற்பட்ட புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் என்பவற்றின் அடிப்படையில் குறுகிய காலத்திற்கு ஆய்வுக் கப்பல்களுக்ககு தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த தடைக்காலத்தை மேற்கோள்காட்டியே நோர்வே ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் கப்பலானது நோர்வேயின் ஆராய்ச்சிக் கப்பலாகும். குறிப்பாக கடல்சார் ஆய்வு நடவடிக்கைகளில் சிறப்பு பணியாற்றியுள்ள இந்த கப்பலானது, பலதுறை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடலுக்கடியில் தானியக்க வாகனங்களைப் பயன்படுத்துவது உட்பட சிக்கலான, பல்துறை ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதில் டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் ஆய்வுக் கப்பல் முக்கியத்துவம் பெற்றதாகும். ஆபிரிக்கா, ஆசியா மற்றும் நோர்வே கடல் பரப்புகளில் பணியாற்றியுள்ள இந்த ஆய்வுக் கப்பல் இலங்கை விஜயத்திற்கு அனுமதி கோரியுள்ளது.
எனினும் இலங்கை வருவதற்கு அனுமதி கோரும் உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைக்காலத்தை மேற்கோள்காட்டி அனுமதி மறுக்கப்படுகின்றது.குறிப்பாக இலங்கை கடற்பரப்புக்குள் வரும் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை கடந்த டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
இந்த தடையை ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விதித்திருந்தது.ஆனால் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதால் ஏற்பட கூடிய இராஜதந்திர நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பொதுவானதொரு மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேராத் தலைமையிலான சிறப்பு குழுவை ஜனாதிபதி அநுரகுமார நியமித்துள்ளார். இந்த குழுவின் பணியானது உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களை இலங்கைக்குள் அனுமதிப்பதாயின் மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறைகளை கவனத்தில் கொண்டு நிலையான ஒரு செயல்பாட்டு செயல்முறையை அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக உருவாக்குவதாகும்.
ஆனால் அவ்வாறான பொதுவானதொரு மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையை இதுவரையில் அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. மாறாக சீன ஆய்வுக்கப்பல்கள் வருவதை கண்டித்து இந்தியா கடுமையான இராஜதந்திர அழுத்தங்களை இலங்கைக்கு கொடுத்து வருகிறது.மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் தொடக்கம் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் தற்போது வரையில் சீன ஆய்வுக்கப்பல்களை இலங்கைக்குள் அனுமதிக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியா கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கிறது.
இவ்வாறானதொரு நிலையிலேயே நோர்வேயின் டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் என்ற ஆய்வுக்கப்பலுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.