No products in the cart.
அமெரிக்காவின் எந்தவொரு தலையீடும் போரை தூண்டுவதாக இருக்கும் : ஈரான்
இஸ்ரேல்- ஈரான் இடையே கடந்த சில தினங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. ஈரானின் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் தலைநகர், மொசாட் தலைமையகம் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்றிரவு உச்சக்கட்டமாக ஈரான், ஹைபர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்மூலம் போர் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோம் என ஈரான் நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் “ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் எந்தவொரு தலையீடும் பிராந்தியத்தில் போரை தூண்டுவதாக இருக்கும் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.