No products in the cart.
உலக கிண்ணத்தில் களமிறங்கும் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில், அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியாக ட்ராவிஸ் ஹெட்டும், மிட்செல் மார்சும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இதற்கான பரீட்சார்த்தமாக, தென்னாபிரிக்க அணியுடன் நாளை ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு 20 தொடரிலும் அந்த ஜோடியே ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியாக களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடருக்கு அவுஸ்திரேலிய அணியை வழிநடத்தவுள்ள மிட்செல் மார்சும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியானது, இலங்கை நேரப்படி பிற்பகல் 2.45க்கு ஆரம்பமாகவுள்ளது.
அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெற்ற 5 போட்டிகளைக் கொண்ட தொடரை அவுஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியிருந்தது.
அதேநேரம், சிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் பங்கேற்றிருந்த தென்னாபிரிக்க அணி, அந்த தொடரின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.
எவ்வாறாயினும், இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடருக்கு முன்னதாக, குறித்த தொடர் நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.