No products in the cart.
பங்களாதேஸ் கிரிக்கெட்டில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள்
பங்களாதேஸ் கிரிக்கெட் சபை, மூன்று முக்கிய பதவிகளுக்கான நியமனங்களை செய்துள்ளது.
சனிக்கிழமை டாக்காவில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்திற்கு பின்னர், இந்த நியமனங்களை வழங்கியுள்ளது.
அதற்கமைய, அலெக்ஸ் மார்சல் (Alex Marshall) ஜூலியன் வூட் ( Julian Wood) மற்றும் டொனி ஹெம்மிங் (Tony Hemming) ஆகியோர் அந்த பதவிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஜூலியன் வூட் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் விசேட துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இறுதியாக இலங்கை கிரிக்கெட் அணிக்கான துடுப்பாட்ட ஆலோசகராக பணியாற்றியிருந்தார்.
அதேநேரம், அலெக்ஸ் மார்சல் பங்களாதேஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்ஷல் கடந்த ஆண்டு செப்டம்பர் வரை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் பொது முகாமையாளராக பணியாற்றியிருந்தார்.
அவர் ஒருவருட காலத்திற்காக இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக, பங்களாதேஸ் கிரிக்கெட் சபையின் ஊடக குழுத் தலைவர் இப்தேகர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மார்ஷல் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவை மேலும் மேம்படுத்த விரும்புவதாகவும் ரஹ்மான் கூறியுள்ளார்.
இதுதவிர பங்களாதேஸ் பிரிமியர் லீக் தொடரின் ஊழல் தடுப்பை கண்காணிப்பதற்கு ஐ.சி.சியின் பங்களிப்புடனான ஒரு குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை மைதான பராமரிப்பாளர் பதவியில் இருந்து விலகிய டொனி ஹெம்மிங் பங்காளாதேஸ் மைதான தலைமை பராமரிப்பாளர் பதவிக்கு நியமனம் பெற்றுள்ளார்.
அவர் இரண்டு வருடங்களுக்கு அந்த பொறுப்பில் இருப்பார் என அறியக்கிடைத்துள்ளது.
அதேநேரம், தற்போது அங்கு மைதான பராமரிப்பாளராக உள்ள காமினி சில்வாவுக்கும் மேலும் ஒருவருட பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.