விளையாட்டு

இங்கிலாந்தின் புதிய கேப்டன் ஜேக்கப் பெத்தேல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் அணி தலைவர் என்ற 136 ஆண்டு கால சாதனையை முறியடித்து, 21 வயதான சகலத்துறை ஆட்டக்காரரான ஜேக்கப் பெத்தேல் புதிய வரலாறு படைத்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணியை அவர் வழிநடத்த உள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணித தலைவராக ஜேக்கப் பெத்தேலை நியமித்துள்ளது. இதன் மூலம், இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் மிக இளம் வயது அணி தலைவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். அடுத்த மாதம் டப்ளினில் இந்தத் தொடர் நடைபெற உள்ளது.

இதற்கு முன்பு, 1889 ஆம் ஆண்டு, மான்டி போடன் தனது 23 வயதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அணி தலைவராக செயல்பட்டதே சாதனையாக இருந்தது. அப்போது அணி தலைவர் ஆப்ரே ஸ்மித்துக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், போடன் அணி தலைவர் பொறுப்பை ஏற்றார்.

தற்போது, 136 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை ஜேக்கப் பெத்தேல் முறியடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஹாரி புரூக் அணி தலைவராக செயல்பட உள்ளதால், அயர்லாந்து தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருடன் சில மூத்த வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டதால், ஜேக்கப் பெத்தேலுக்கு அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பார்படாஸில் பிறந்த ஜேக்கப் பெத்தேல், ஒரு திறமையான இடது கை துடுப்பாட்ட வீரர் மற்றும் இடது கை ஆர்த்தடாக்ஸ் பந்துவீச்சாளர் ஆவார். தனது 21 வயதிலேயே இங்கிலாந்து அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமாகிவிட்டார். கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், மிகக் குறுகிய காலத்தில் தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இங்கிலாந்து தேர்வாளர் லூக் ரைட் இதுபற்றி தெரிவிக்கையில்,

‘ஜேக்கப் பெத்தேல் இங்கிலாந்து அணியில் இணைந்ததிலிருந்து தனது தலைமைப் பண்புகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான இந்தத் தொடர், சர்வதேச அளவில் அவரது தலைமைப் பண்புகளை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்’ என்று தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…