No products in the cart.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (22) கைது செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அவர் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இந்நிலையில், ஜூன் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தது.
அதைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
இந்தநிலையில் விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.