No products in the cart.
ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழி புலமைப்பரிசில் பெற்றவர்களுக்கான ஆங்கில தின 2025 நிகழ்வுகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு
ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டத்தின் (JKELSP) கீழ் 2024/25 காலப்பகுதிக்கான `English for Teens’ புலமைப்பரிசில் பெற்றுக் கொண்டவர்களுக்கான ஆங்கில தின நிகழ்வுகள் அண்மையில் நிறைவடைந்தன. எதிர்காலத்துக்கு பயனளிக்கும் வகையில் அத்தியாவசியமான திறன்களை வருடம் முழுவதும் பயின்றிருந்ததை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு, ஐந்து மாகாணங்களில் நடைபெற்றன. இவற்றில், மாணவர்கள் எய்தியிருந்த சிறந்த முன்னேற்றம் வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவர்களின் ஆங்கில மொழி ஆற்றல், நம்பிக்கை மற்றும் தொடர்பாடல் திறன்கள் மேம்பட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆங்கில தின நிகழ்வுகள் ஏக்கல, ஜி.பி. சேனநாயக்க கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன், இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கார்மெலின் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “எமது புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொண்டவர்களின் ஆர்வம் மற்றும் சிறந்த செயற்பாடுகளை காண்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த சில மாதங்களாக நீங்கள் கற்றுக் கொண்ட விடயங்களுக்கு அப்பால் எவ்வாறான விடயங்களை நீங்கள் மேற்கொண்டுள்ளீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. இன்று நீங்கள் வெளிப்படுத்தும் திறன்களினூடாக, தொடர்ந்தும் உங்களின் தொடர்பாடல் மற்றும் ICT திறன்களை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காண்பிப்பீர்கள் என நாம் நம்புகிறோம். அதனூடாக நீங்கள் உயர் கல்வியை தொடர்வது மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது மாத்திரமன்றி, எமது நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிப்பு வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
JKELSP இன் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடாக `English for Teens’ அமைந்திருப்பதுடன், இரு நிலைகளில் (2 Tiers) முன்னெடுக்கப்பட்டது. Tier 1 இல் வருடாந்தம் 700 க்கும் அதிகமான புலமைப்பரிசில்கள், 12 – 14 வயதுக்குட்பட்ட நடுத்தரளவு அரச பாடசாலைகளின் மாணவர்களுக்கு, தமது ஆங்கில மொழித் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், ICT இல் அடிப்படை நிலை அறிவை பெற்றுக்கொள்வதற்கு உதவும் வகையிலும் வழங்கப்படுகின்றன. மாணவர்களை அவர்களின் பாடசாலை அதிபர்கள் பரிந்துரைப்பதுடன், பிரவேச பரீட்சையினூடாக தெரிவு செய்யப்படுவர். கற்றுக் கொண்ட விடயங்களின் வினைத்திறன், கற்கைநெறி நிறைவில் பரீட்சை மற்றும் வருடாந்த ஆங்கில தின நிகழ்வுகளினூடாக மதிப்பிடப்படும். சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு, Tier 2 இற்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். ஆங்கிலம் மற்றும் ICT இல் தாம் கற்றுக் கொண்ட விடயங்களை வெளிப்படுத்துவதற்கும், அவர்களின் ஆக்கத்திறன் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பாக ஆங்கில தினங்கள் அமைந்துள்ளன. 2004 ஆம் ஆண்டில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினால் 21,500 க்கும் அதிகமான புலமைப்பரிசில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தேவைகளைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tier 2 ஆங்கில தின செயற்பாடுகளின் இறுதிச் சுற்று 2025 ஜுன் 26 ஆம் திகதி ஒன்லைனில் நடைபெற்றதுடன், Tier 1 ஆங்கில தினங்கள் கிழக்கு, தென், மத்திய, மேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் ஜுலை மாத பிற்பகுதி முதல் செப்டெம்பர் மாத முற்பகுதி வரை பிராந்திய மட்டத்தில் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் PowerPoint presentations மற்றும் நாடகங்களினூடாக போட்டி அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், மாணவர்கள் கற்றுக் கொண்ட விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. ஜோன் கீல்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 44 இற்கும் அதிகமான தன்னார்வ செயற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வுகளுக்கு, ஆரம்ப தயார்ப்படுத்தல்கள், நடுவர்களாக செயலாற்றியிருந்தமை மற்றும் கள ஆதரவை வழங்கியிருந்தமை போன்றவற்றினூடாக ஆதரவளித்திருந்தனர்.
மத்திய மாகாணத்தின் பங்குபற்றும் மாணவர் ஒருவரின் பெற்றார் ஒருவர் குறிப்பிடுகையில், “திறன் தேடலில் கிராமிய சமூகங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவு முக்கியத்துவம் வழங்கப்பட்ட போதிலும், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினால், சிறுவர்களின் திறமைகளை இனங்கண்டு, அவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தத் திட்டம் ஒரு சான்றிதழ் என்பதற்கு அப்பாற்பட்டதுடன், அவர்களின் எதிர்கால வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு அர்த்தமுள்ள முதலீடாக அமைந்துள்ளது.” என்றார்.
JKELSP இற்காக புதிதாக ஆட்சேர்ப்பு 2025 செப்டெம்பரில் ஆரம்பிக்கும் என்பதுடன், நாட்டின் சகல மாகாணங்களிலும் 18 க்கும் அதிகமான பகுதிகளில் முன்னெடுக்கப்படும். பாடசாலைகளினூடாக விண்ணப்பங்கள் பற்றிய அறிவித்தல்கள் வழங்கப்படுவதை அவதானிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
`English for Teens’ என்பதற்கு மேலதிகமாக JKELSP இனால், பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கான ஆங்கில மொழிமுகாம்கள் முன்னெடுக்கப்படுவதுடன், பணியாற்றுவோருக்காகவும், மாற்றுத்திறனாளிகளுக்காகவும் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க ஆங்கில மொழி கற்கைநெறிகளையும் வழங்குகிறது.
கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதாரம், சமூக சுகாதாரம் மற்றும் ஒற்றுமை மற்றும் உயிரியல் பரம்பல் ஆகியவை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நான்கு கவனம் செலுத்தும் பகுதிகளாகும் – இது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்) இன் சமூக பொறுப்புணர்வு அமைப்பாகும். இது 7 மாறுபட்ட தொழில் துறைகளில் 80 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 18,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் கடந்த 20 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக’ தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவின் ‘கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் ஜேகேஎச் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. உலகளாவிய ஒப்பந்தத்தின் பங்கேற்பாளராகவும் இருக்கும் அதே வேளையில், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு ஊக்கியாக இருக்கும் ‘ Plasticcycle’ என்ற சமூக தொழில்முனைவோர் முயற்சியின் மூலமாகவும், “எதிர்காலத்துக்காக தேசத்தை வலுப்படுத்துதல்” என்ற அதன் சமூகப் பொறுப்புணர்வு தொலைநோக்குப் பார்வைக்கமைய ஜே.கே.எச் இயக்குகிறது.