No products in the cart.
அமெரிக்க கிரிக்கெட் பேரவை உறுப்பினர் அந்தஸ்து நீக்கம் – சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிரடி நடவடிக்கை
சர்வதேச கிரிக்கெட் பேரவை, அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை நிர்வாக சீர்கேடுகளை காரணம் காட்டி உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.
இந்த முடிவு உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அமெரிக்க கிரிக்கெட் சங்கம், சர்சதேச கிரிக்கெட் விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பை செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைநீக்க நடவடிக்கையை துரதிர்ஷ்டவசமானது அதேநுரம் மிகவும் அவசியமானது என்று தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த நடவடிக்கையால் வீரர்களோ, விளையாட்டோ பாதிக்கப்படாது என்பதை உறுதிபடுத்தியுள்ளது.
இதன்படி, அமெரிக்காவின் தேசிய அணிகள், சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்தும் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கலாம்.
2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தயாரிப்புகளிலும், அதில் பங்கேற்பதிலும் எந்த தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இடைநீக்கம் நடைமுறையில் இருக்கும் வரை, அமெரிக்க தேசிய அணிகளின் நிர்வாகத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேரடியாகவோ அல்லது அதன் பிரதிநிதிகள் மூலமாகவோ கவனிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.