No products in the cart.
தூசு தட்டப்படும் திருகோணமலை எண்ணெய் தொட்டி திட்டம் – காலம் கடந்து பிறந்த ஞானம்
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழல் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் நீண்டகாலமாக தாமதமடைந்துவரும் திருகோணமலை எண்ணெய் தொட்டி பண்ணை (Trincomalee Oil Tank Farm) திட்டம் தொடர்பில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக இந்தத் திட்டம் குறித்து பேச்சுகள் இடம்பெற்று வந்துள்ள போதிலும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் காரணமாக உறுதியான நிலைப்பாடுகளை எந்தவொரு அரசாங்கமும் எடுத்திருக்கவில்லை. என்றாலும், இன்று இலங்கையில் எரிசக்தி பாதுகாப்பு அவசரத் தேவையாக மாறியுள்ளதால் இத்திட்டம் குறித்த அவசரக் கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகம் வரலாற்று காலம் தொட்டு முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் (Indo-Sri Lanka Accord) மூலம் இந்த எண்ணெய் தொட்டி வளாகத்தின் அபிவிருத்தியில் இந்தியாவின் பங்கேற்பு முதன்முதலாக 2000ஆம் ஆண்டில் ஆரம்பமானது.
இந்திய எண்ணெய் நிறுவனம் (Indian Oil Corporation) இலங்கை எரிசக்தி சந்தையில் நுழைந்தாலும், முழுமையான அபிவிருத்தி இங்கு நடைபெறவில்லை. 2015ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி திருகோணமலையை ஒரு பெற்றோலிய மையமாக மாற்றும் நோக்கத்தை வலியுறுத்திய போது இந்தத் திட்டம் மீண்டும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது.
அதன்பின், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியின் கீழ் 2023ஆம் ஆண்டு இந்தத் திட்டம் நடைமுறை வடிவம் பெறத் தொடங்கியது. இலங்கை மற்றும் இந்தியா இணைந்து Trinco Petroleum Terminal Ltd என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கின. இதில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) 51 சதவீத பங்கையும், இலங்கை-இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் 49 சதவீத பங்கையும் பெற்றுள்ளன.
மொத்தம் உள்ள 99 எண்ணெய் தொட்டிகளில் 61 தொட்டிகளை இருநாடுகளும் இணைந்து அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இத் திட்டம் வெறும் பேச்சளவு என்ற நிலையை விட்டு செயல்முறை நிலைக்கு நகர்ந்தது.
ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பொறுப்பேற்ற பின்னர் 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் திட்டம் மேலும் ஒரு முக்கிய பரிமாணத்தை எட்டியது.
இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்து திருகோணமலையையும் தென் இந்தியாவையும் இணைக்கும் எண்ணெய் குழாய் அமைப்பை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தன. இதனுடன் மின்சார வலையமைப்புகளை இணைக்கும் முயற்சிகள் குறித்தும் பேசப்பட்டன. இருப்பினும், இந்தப் திட்டம் இன்னமும் தாமத நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையில், இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஸ்ணனின் (C.P.Radhakrishnan) சமீபத்திய இலங்கை விஜயம் இந்த விவகாரத்தை மீண்டும் பேசுபொருளாக மாற்றியுள்ளது. அவருடன் வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri), இந்தத் திட்டம் குறித்து “இனிமேலும் காலத்தை வீணடிக்க முடியாது” என்று வலியுறுத்தினார். இந்த கருத்து, திட்டத்தின் அவசரத் தேவையையும், அதன் மூலோபாய முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
இன்றைய உலக சூழலில், எரிசக்தி பாதுகாப்பு என்பது வெறும் பொருளாதார விடயம் மட்டுமல்ல. அது ஒரு நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கும் நேரடியாக தொடர்புடையதாக மாறியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக எரிபொருள் விலைகள் உயர்வதும், விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படுவதும், இலங்கை போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் நீண்டகால எரிசக்தி சேமிப்பு திறன் மற்றும் விநியோக பாதுகாப்பு மிகவும் அவசியமாகியுள்ளது.
மேலும், இந்தத் திட்டம் இந்தியா-இலங்கை உறவில் புதிய பரிமாணத்தையும் பிரதிபலிக்கிறது. முன்பு உதவி மற்றும் கடன் அடிப்படையில் இருந்த உறவுகள், தற்போது முதலீட்டு மற்றும் பொருளாதார கூட்டாண்மையாக மாறிவருகின்றன. கொழும்பு துறைமுகம் உட்பட பல திட்டங்களில் இந்திய முதலீடுகள் அதிகரித்திருப்பது இதற்கு சிற்நத உதாரணமாகும். திருகோணமலை திட்டம் இந்த மாற்றத்தின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
எனினும், இந்தத் திட்டம் இன்னும் பல சவால்களை எதிர்கொள்வதாக உள்ளது. குறிப்பாக திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர மிகப்பெரிய நிதி தேவைகள் உள்ளன. அத்துடன், தொழில்நுட்ப சிக்கல்கள், வணிக மாதிரி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படாத நிலை மற்றும் பழைய கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க வேண்டிய அவசியம் ஆகியவை முன்னேற்றத்தை தாமதப்படுத்துகின்றன.
1930களில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்தத் எண்ணெய் தொட்டி வளாகத்தின் அடிப்படை வசதிகளை மீளமைப்பது ஒரு பாரிய சவாலாக கணிப்பிடப்பட்டுள்ளது.
என்றாலும், தற்போதைய நெருக்கடியான நிலையில் திருகோணமலை எண்ணெய் தொட்டி திட்டம் இலங்கையின் பொருளாதார பாதுகாப்பிற்கும், எரிசக்தி சுயாதீனத்திற்கும், பிராந்திய மூலோபாய முக்கியத்துவத்திற்கும் அவசர முன்னுரிமையாக மாறியுள்ளது.
இதனால் இந்தத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை அரசாங்கம் விரைவுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கலந்துரையாட அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் புதுடில்லிக்குப் பயணிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எண்ணெய் தொட்டி வளாக திட்டம் இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முக்கிய அடித்தளம். இத்திட்டம் விரைவாகவும் திறமையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது இலங்கையை தெற்காசியாவின் முக்கிய எரிசக்தி மையமாக மாற்றும் திறன் கொண்டதாக மாற்றும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.














