இலங்கை

ஒலுவில் துறைமுகத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க நடவடிக்கை – பிரதி அமைச்சர்

ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தகத் துறைமுகத்தை மீளச் செயற்படுத்துவதற்கான நீண்டகால மற்றும் விஞ்ஞானப்பூர்வமான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டின் கடல் மற்றும் நீரியல் வளங்களை நிலைபேறான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (09.09.2026) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, துறைமுகங்களின் தற்போதைய நிலை, மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சுருக்கு வலைப் பயன்பாட்டுக்கான அனுமதிப்பத்திர விதிமுறைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மணல் படிவத்தால் பாதிக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தகத் துறைமுகம் நீண்டகாலமாக மணல் படிவத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் காரணமாக ஒலுவில் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மீனவக் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட காலப்பகுதியில் அலைகளின் வேகம், காற்றின் வேகம், கடல் நீரோட்டங்களின் தன்மை மற்றும் மணல் நகர்வு உள்ளிட்ட முக்கிய காரணிகள் தொடர்பில் போதுமான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததே தற்போதைய நிலைமைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளுக்கு சிரமம் சுமார் நான்கு தசாப்தங்களாக துறைமுக நிர்மாணம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், போதிய அறிவியல் தரவுகள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்படாததன் காரணமாக துறைமுக நுழைவாயிலில் பாரியளவில் மணல் படிந்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் மாதிரி ஆய்வுகள், கிடைக்கப்பெற்ற அறிவியல் தரவுகள் மற்றும் மீனவ சமூகத்தினரின் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து திட்டமிடப்படாததன் விளைவாக, தற்போது வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் துறைமுகத்திற்குள் நுழைவதிலும் வெளியேறுவதிலும் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். துறைமுகத்தில் தேங்கியுள்ள மணலை அகற்ற திட்டம் ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும், துறைமுகப் பகுதியில் தேங்கியுள்ள மணலை அகற்றி அதனைப் பெறுவதில் அந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். எனினும், கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த மணலில் முக்கியமான கனிமப் பொருட்கள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை வெளிநாடுகளுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால், தற்காலிகத் தீர்வுகளை முன்னெடுப்பதை விட, ஒலுவில் துறைமுகப் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையில் நிலையானதும் விஞ்ஞானப்பூர்வமானதுமான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். பல நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு அமைப்பு ஒலுவில் துறைமுகப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி அலுவலகம், சுற்றாடல் அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கூட்டு அமைப்பின் ஊடாக ஒலுவில் துறைமுகத்தின் தற்போதைய நிலைமை குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, நீண்டகால அடிப்படையில் துறைமுகத்தை மீளச் செயற்படுத்துவதற்கான நிலையான தீர்வை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…