No products in the cart.
கொமர்ஷல் வங்கியின் ‘அருணலு சித்திரம் 2025’ இளம் கற்பனைகளை பிரதிபலிக்கவும், பாரிய வெற்றியைப் பெறவும் அழைக்கிறது!
தூரிகைகள், கற்பனைகள் தயாராக உள்ளன – இலங்கையின் மிகவும் விரும்பப்படும் குழந்தைகள் ஓவியப் போட்டியான ‘அருணலு சித்திரம்’ 2025 ஆம் ஆண்டு மீண்டும் வருகிறது. கொமர்ஷல் வங்கியால் ஆறாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அற்புதமான நாடளாவிய மற்றும் சர்வதேச சித்திரப் போட்டி டிஜிட்டல் முறையில் தொடங்கப்பட்டுள்ளதுடன் 4 முதல் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் தமது படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், ரூ.4.8 மில்லியனுக்கும் அதிகமான ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறவும் போட்டியில் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இளம் திறமைகளை எல்லைகளுக்கு அப்பால் பிரகாசிக்க தளத்தினை வழங்கும் அருணலு சித்திரம் 2025 இலங்கையில் வசிக்கும் பிள்ளைகளுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் திறந்திருக்கும். முந்தைய ஆண்டுகளைப் போலவே, போட்டியும் முற்றிலும் இணையத்தள ரீதியாகவே நடத்தப்படும். பங்கேற்பாளர்கள் தமது சித்திரப் படைப்புகளை www.arunalusiththam.lk என்ற பிரத்தி யேக வலைத்தளத்தில் ஆகஸ்ட் 31, 2025 அல்லது அதற்கு முன்னதாக பதிவேற்றுவதன் மூலம் சமர்ப்பிக்கலாம்.
4–5, 6–7, 8–10, 11–13 மற்றும் 14–16 வயதுக்குட்பட்ட ஐந்து வயதுப் பிரிவுகளில் பதிவுகள் பரிசீலிக்கப்படும். ஒவ்வொரு பிள்ளையும் கொமர்ஷல் வங்கிக் கணக்கை வைத்திருக்கிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் போட்டியில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள் என்று வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் வெற்றியாளர்கள் முதலில் மாகாண மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தேசிய அளவில் உயர் விருதுகளுக்கு போட்டியிடுவதற்காக முன்னேறுவார்கள்.
ஒவ்வொரு வயது பிரிவிலும் தேசிய அளவிலான வெற்றியாளர்கள் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கு ரூ.100,000, ரூ.75,000 மற்றும் ரூ.50,000 ரொக்கப் பரிசுகளைப் பெறுவார்கள். ஒன்பது மாகாணங்களிலும் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.25,000, ரூ.15,000 மற்றும் ரூ.10,000 வழங்கப்படும். எந்த இளம் திறமையும் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாகாணத்திலும் 4 முதல் 10 ஆம் இடங்களைப் பெறும் நூற்றுக்கணக்கான வளரும் இளம் கலைஞர்களுக்கு தகுதிகாண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் பங்கேற்பை ஊக்குவிக்கும் நிறுவனங்களும் அங்கீகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மொத்தம் ரூ.1.25 மில்லியன் பாடசாலைப் பரிசுகள் என்ற ரீதியில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகளை சமர்ப்பிக்கும் பாடசாலைக்கு தலா ரூ.50,000 வழங்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பிள்ளைகளும் பங்கேற்கலாம், வெளிநாடுகளில் இருந்து ஒவ்வொரு வயதுப் பிரிவிலிருந்தும் ஒரு வெற்றியாளர் சிறந்த பதிவுக்கு ரூ.50,000யை வெல்ல முடியும்.
ரொக்கப் பரிசுகளை வெல்லும் கொமர்ஷல் வங்கியின் ‘அருணலு’ அல்லது ‘இசுறு’ சிறுவர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் காத்திருக்கின்றன, இது வங்கியின் இளம் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக பலனளிக்கும் அனுபவமாக அமைகிறது. அனைத்து சித்திரங்களும் நிபுணத்துவம் வாய்ந்த நடுவர் குழுவால் மதிப்பீடு செய்யப்படும், ஒவ்வொரு தெரிவும் கலைத் தகுதி மற்றும் யதார்த்த ரீதியில் வழிநடத்தப்படும். இந்தப் போட்டி வெகுமதி அளிப்பதுடன் மட்டுமல்லாமல், பிள்ளைகள் தம்மை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.