No products in the cart.
பல்லுயிரினத்தை மேம்படுத்தி, சிறுத்தைகளைக் காப்பதனூடாக நிலப்பரப்பைப் பாதுகாக்கும் முயற்சிக்காக DFCC வங்கி மற்றும் WWCT ஆகியன கைகோர்த்துள்ளன
இலங்கையில் அழிவடைந்து வரும் ஒரு இனமாகக் காணப்படும் வேட்டையாடும் உச்ச விலங்கான இலங்கைச் சிறுத்தைப் புலிகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி, இலங்கையின் பல்லுயிரினத்தைக் காக்கும் நோக்குடனான அறிவியல் அடிப்படையிலான முயற்சியான Wilderness and Wildlife Conservation Trust (WWCT) உடனான மூன்று ஆண்டு கால மூலோபாய கூட்டாண்மை குறித்து DFCC வங்கி அறிவித்துள்ளது.
பாதுகாக்கப்படவேண்டிய இனங்களில் ஒன்றாக சிறுத்தையினம் காணப்படுவதைப் புரிந்து கொண்டே இந்த கூட்டாண்மை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பாதுகாப்பது என்பது ஒட்டுமொத்த சூழல் கட்டமைப்பையும் மற்றும் அதனுடன் வாழ்விடங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஏனைய எண்ணற்ற உயிரினங்களையும் பாதுகாப்பதற்குச் சமனாகும். சிறுத்தைகளைக் காப்பதற்கு ஆதரவளிப்பதனூடாக, பல்லுயிரின பாதுகாப்பு, சூழல் நெகிழ்திறன், மற்றும் மக்களுக்கும், வனவிலங்களுக்கும் இடையில் நிலைபேணத்தக்க சக வாழ்வு உள்ளிட்ட பரந்த அர்ப்பணிப்பை DFCC வங்கி மற்றும் WWCT ஆகியன வெளிப்படுத்தியுள்ளன.
DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “நிலைபேணத்தக்க எதிர்காலம் குறித்த எமது குறிக்கோளின் உள்ளார்ந்த அங்கமாக சூழல் பாதுகாப்பு காணப்படுகின்றது. இயற்கையைப் பாதுகாப்பது மாத்திரமன்றி, சமூகங்கள் வாழக்கூடிய, தொழிலை முன்னெடுக்கக்கூடிய, மற்றும் தமது சூழலுடன் சமநிலையைப் பேணி வளம் காண்பதை உறுதி செய்வதில் எமது கவனம் தங்கியுள்ளது. இக்கூட்டாண்மையினூடாக, மக்களுக்கும், வனவிலங்களுக்கும் இடையில் களத்தில் நிலவும் பிணக்குகளைக் குறைத்து, நீடித்து நிலைக்கும் மதிப்பை வழங்குகின்ற விழிப்புணர்வு, அறிவூட்டல், மற்றும் நடைமுறைத் தீர்வுகள் மீது நாம் முதலீடு செய்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
WWCT ன் இணை ஸ்தாபகரும், நிர்வாக அறங்காவலருமான சூழலியலாளர் அஞ்சலி வட்சன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “சிறுத்தைப் புலிகள் இலங்கையின் ஒரேயொரு தரையில் வேட்டையாடும் உச்ச விலங்கினமாகக் காணப்படுவதுடன், அதனை அழியவிடாது தொடர்ந்து காப்பது என்பது, ஒட்டுமொத்த சூழல் கட்டமைப்பையும் பாதுகாப்பதற்குச் சமமாகும். சிறுத்தைகளைப் பாதுகாப்பதன் மீது கவனம் செலுத்துவது, பரந்த அளவில் தரையமைப்பையும், பல்லுயிரினத்தையும் பாதுகாப்பதற்கான வேகமான, திறன்மிக்க வழிமுறையாக உள்ளதை WWCT ல் எமது ஆய்வுகள் காண்பிக்கின்றன. பாரியளவில் வளங்களைத் திரட்டுவதற்கான அணுகலுக்கு இக்கூட்டாண்மை எமக்கு உதவி, இந்த அறிவியலை சமூகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று, பாதுகாப்பு என்பது வெறுமனே புள்ளி விபரங்களால் முன்னெடுக்கப்படுவது அல்லாது, அனைத்தையும் அரவணைக்கின்ற, மற்றும் நடைமுறைரீதியான ஒன்று என்பதை உறுதி செய்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
சூழலியலில் சிறுத்தைகளின் வகிபாகம் மற்றும் நிலம் துண்டு துண்டாகப் பிரிக்கப்படுதல், கண்ணிகள் அல்லது பொறிகள், மற்றும் வேட்டையாடல் ஆகியவற்றால் விளைவிக்கப்படுகின்ற ஆபத்துக்கள் குறித்து வெளிக்காண்பிப்பதற்கு நாடளாவியரீதியில் விழிப்புணர்வுப் பிரச்சாரமொன்று இந்த ஒத்துழைப்பினூடாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளையில், சிறுத்தைகளின் இறப்பைக் குறைப்பதற்கு அதிக ஆபத்து காணப்படும் பிரதேசங்களில் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட தலையீட்டு நடவடிக்கைகள் மாதிரி முயற்சியாக மேற்கொள்ளப்படவுள்ளன. கண்ணிகள் அல்லது பொறிகளுக்குப் பதிலாக உயிர் ஆபத்தை விளைவிக்காத வகையில் பயிர் காப்பு வேலிகளை அறிமுகப்படுத்தல், தவறான நடவடிக்கைகளால் ஏற்படுகின்ற கால்நடை இழப்புக்களைத் தடுப்பதற்காக கால்நடை சிகிச்சை ஆதரவை வழங்குதல், தொற்றுவியாதி பரவுவதை குறைத்தல், மற்றும் கிராமப் புற சமூகங்கள் வனவிலங்குகளுடன் மிகவும் பாதுகாப்பாக, வாழ்வதற்கு இடமளிக்கும் சக வாழ்வுக்கான மூலோபாயங்களை வகுத்தல் ஆகியவற்றை இவை உள்ளடக்கியுள்ளன.
கடந்த இரு தசாப்த காலங்களுக்கும் மேலாக, இலங்கையின் முன்னணி ஆராய்ச்சி முன்னிலைப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாக WWCT தன்னை ஸ்தாபித்துக் கொண்டுள்ளது. இலங்கையில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்த மிகவும் விரிவான புள்ளி விபரங்கள் சிலவற்றை அதன் சிறுத்தைகள் செயற்திட்டம் வெளிக்கொண்டு வந்துள்ளதுடன், அது தேசிய பாதுகாப்பு கொள்கைகளில் நேரடியாக செல்வாக்குச் செலுத்தி, மனித-வனவிலங்கு சக வாழ்வுக்கான களப்பணிக்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது.
பல்லுயிரின பாதுகாப்பு, காலநிலை நெகிழ்திறன், மற்றும் சமூக மட்ட பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிக்கின்ற DFCC வங்கியின் நிலைபேற்றியல் வேலைத்திட்டத்தின் கீழ் இக்கூட்டாண்மை இடம்பெற்றுள்ளது. வர்த்தகத்தை சூழல் பாதுகாப்புடன் ஒன்றிக்கச் செய்து, இலங்கையில் நிலைபேணத்தக்க எதிர்காலத்தைச் செதுக்குவதற்கு அர்த்தமுள்ள பங்கினை ஆற்றும் வங்கியின் நீண்ட கால அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கின்றது.