No products in the cart.
செலான் வங்கி, தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடனான தனது மூலோபாய இணைவை தொடர்ந்து 4ஆவது ஆண்டாக புதுப்பித்துள்ளது
செலான் வங்கி பிஎல்சி, இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடனான (NCE) தனது மூலோபாய இணைவை தொடர்ந்து நான்காவது வருடமாக புதுப்பித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கொழும்பில் உள்ள செலான் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இரு நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த தொடர்ச்சியான இணைவின் மூலம் செலான் வங்கி, தற்போது உலகளாவிய சந்தையில் காலடி எடுத்து வைக்க முயலும் மற்றும் தற்போதுள்ள அதன் சர்வதேச எல்லையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட NCE உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட நிதி தீர்வுகளை வழங்கவுள்ளது. இந்தக் கூட்டாண்மை, ஏற்றுமதி நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கவும், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார மீட்சிக்கு பங்களிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் இணைவு குறித்து செலான் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரமேஷ் ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், எங்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஏற்றுமதித் துறையை குறிப்பாக SMEகளை வலுவூட்டுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். NCE உடனான எங்கள் நீண்டகால இணைவு, ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு சந்தைகளில் வெற்றிபெறத் தேவையான நிதி கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதில் எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் அதே நேரத்தில் தேசிய பொருளாதாரத்திற்கும் பங்களிக்கிறது. என்றார்.
இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷிஹாம் மரிக்கார் மேலும் தெரிவிக்கையில், எங்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கு வாய்ப்புகளையும் பயனுள்ள தளங்களையும் உருவாக்க NCE எப்போதும் அயராது உழைத்து வருகின்றது. செலான் வங்கியுடனான எங்கள் புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மை, உலகளாவிய ரீதியாக வணிகத்தில் சிறந்து விளங்க எங்கள் உறுப்பினர்களின் திறனை மேம்படுத்தும் சிறப்பு நிதி சேவைகள், தொழில்துறை நிபுணத்துவம் மற்றும் கூட்டுத் திட்டங்களிற்கான அணுகல் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்கிறது.” என்றார்.
இது தொடர்பாக, இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் இந்த்ரா கௌஷல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், உலகளாவிய சவால்களை தொடர்ந்து எதிர்கொண்டு வரும் எங்கள் ஏற்றுமதியாளர்களுக்கு, செலான் வங்கியுடனான இந்தப் புதுப்பிக்கப்பட்ட இணைவு ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது. தனிப்பயனாக்கப்பட்ட நிதி தீர்வுகளுக்கான அணுகலை வலுப்படுத்துவதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தைகளில் தடம் பதிப்பதற்கு வழிவகுப்பதுடன் இலங்கையை வலுவான, ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவதற்கான சம்மேளனத்தின் நோக்கத்தையும் பலப்படுத்துகிறது. உலகளாவிய அரங்கில் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை உறுதி செய்வதற்கு இது போன்ற கூட்டாண்மைகள் மிக முக்கியமானவை. என்றார்.
ஏற்றுமதியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரத்தியேக சம்மேளனமாக NCEஇன் உறுப்பினர்களுக்கும் செலான் வங்கிக்கும் இடையிலான உறவை பலப்படுத்த இவ் இணைவு தளமாக அமைகிறது. ஏற்றுமதித் துறையின் சிறப்பைக் கொண்டாடும் முன்னணி நிகழ்வான, NCE வருடாந்த ஏற்றுமதி விருதுகள் உட்பட, சம்மேளனத்தின் முக்கிய முன்முயற்சிகளில் வங்கியின் செயலூக்கமான நடவடிக்கைகள் ஊடாக உறுப்பினர்கள் அதன் பயனடைவார்கள்.
நிதி சேவைகளுக்கு அப்பால், அறிவுப் பகிர்வு, புத்தாக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி சமூகத்தின் திறனை வளர்ப்பதை இந்தக் கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு வளங்கள் மற்றும் நிபுணத்துவத்துடனான ஆதரவை வழங்குவதன் மூலம் இந்த இணைவு SMEகளை ஊக்கப்படுத்தும் நிலையான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உலகளாவிய வர்த்தகத்தில் இலங்கை போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்கும் பங்களிக்கிறது.
ஏற்றுமதியாளர்களை மேம்படுத்துதல், நிதி ஆதரவை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான வெளிநாட்டு வருமானத்தை உருவாக்குவதற்கான வழிகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இலங்கையின் ஏற்றுமதித் துறையில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான செலான் வங்கி மற்றும் NCE ஆகியவற்றின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்தப் புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.